
6 முதம் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்கல்வி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோன தொற்று குறைந்துள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக 100 க்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா உயிரிழப்பு தொடந்து பூஜ்ஜியமாகவே உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மிக குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கபபட்டு, ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இந்நிலையில் கொரோனா 2 வது அலை குறைய தொடங்கியதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் ஜனவரி மாதம் கொரோனா மூன்றாவது அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்ப்ட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டன. பின்னர், கொரோனா பாதிப்பு படிபடியாக குறைய தொடங்கியது. ஒரு நாள் பாதிப்பு 30,000 க்கும் மேல் பதிவான நிலையில் தற்போது 100 க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்து தளர்த்தபட்டுள்ளன. மேலும் பிப்ரவரி 1 முதல் மழலையர், நர்சரி, 1- 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கபட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டன. இச்சூழலில், தொற்று பரவல் அச்சம் காரணமாக பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளிக்காமல் இருந்தது. பல்வேறு தரப்புகளில் இருந்தும் உடற்கல்வி வகுப்புகள் நடத்த கோரிக்கைகள் எழுந்த நிலையில், தற்போது 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் அவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள வகுப்பினருக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உடற்கல்வி வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.