
விழுப்புரம்
பெரியார் சிலையை உடைப்போம் என்ற எச்.ராஜாவை கைது செய்ய கோரி அவரின் உருவ பொம்மையை எரித்து விழுப்புரத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின், தனது டிவிட்டர் பதிவில் பெரியாரின் சிலையை உடைப்போம் என்று கூறியுள்ளதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் எச்.ராஜாவை கண்டித்து அவரது உருவபொம்மையை தீ வைத்து எரித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, விழுப்புரத்தில் நேற்று காலை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விழுப்புரம் காந்தி சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர் வீதியில் உள்ள பெரியார் சிலை அருகில் வந்தடைந்தனர்.
அங்கு எச்.ராஜாவை கண்டித்தும், அவரை உடனே கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பியவாறு எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் விழுப்புரம் பெரியார் சிலை அருகில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு எச்.ராஜாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். இந்த ஊர்வலம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முடிவடைந்தது.
இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், முத்தையன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர தலைவர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன்,
ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, கல்பட்டு ராஜா, தெய்வசிகாமணி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சித்திக்அலி உள்பட பலர் பங்கேற்றனர்.