
காஞ்புரம்
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் மட்டும் கடந்த 7 வருடங்களில் 44 ஆயிரத்து 714 பேருக்கு 188 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று செய்தியாளர்களிடம், "தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ஆம் ஆண்டு செயல்படுத்தினார்.
அதன்படி, ஏழை - எளிய குடும்பத்துப் பெண்களின் திருமாங்கல்யத்துக்காக தங்கத்துடன், நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த பெண்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் ரூ.25 ஆயிரமும், பட்டம் - பட்டயப்படிப்பு பெற்ற பெண்களுக்கு 4 கிராம் தங்கத்துடன், ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, 2016 முதல் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 4 கிராம் என்பது 8 கிராமாக உயர்த்தி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, சமூக நலத்துறையில் உள்ள மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவி, மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி, ஈ.வே.ரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி, மருத்துவர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி, அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி ஆகிய திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, கடந்த 7 வருடங்களில் 44 ஆயிரத்து 714 பேருக்கு ரூ.146 கோடியே 53 இலட்சத்து 75 ஆயிரம் நிதியும், 188.016 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.