திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எங்கள் கட்சி பங்கேற்காது – ஜி.கே.வாசன் திட்டவட்டம்…

First Published Sep 4, 2017, 8:22 AM IST
Highlights
Our party will not participate in all party meetings - GK Vasan


திருச்சி

திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் எங்கள் கட்சி பங்கேற்காது என்று த.மா.கா-வின் தலைவர் ஜி.கே.வாசன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், உறையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரசு கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “நீட் தேர்வு குழப்பத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (இன்று) அரியலூர் சென்று மாணவியின் தந்தையைச் சந்திக்க உள்ளேன்.

மழை காரணமாக திருச்சியில் கட்டிடம் இடிந்து விழுந்து நான்கு பேர் இறந்தச் சம்பவம் கேட்டு வருத்தமடைந்தேன். மாநகராட்சி நிர்வாகம் பழைய கட்டிடங்கள் மீது புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது. பழைய கட்டிடங்களின் தரத்தினை மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போது தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு உகந்த காலம் என்பதால் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்து விட மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்.

வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை மத்திய – மாநில அரசுகள் தள்ளுபடி செய்து, பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை கொடுக்க வேண்டும்.

திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கூட்டத்தில் தமாகா பங்கேற்காது.

ஆனால், நீட் தேர்வுக்கு எதிரான கொள்கைகளுக்கு உடன்படுகிறேன். மாணவி அனிதாவின் சாவு ஒரு பாடம். எனவே, நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

click me!