
பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு, எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஒருமித்த கருத்துடன் எங்களின் ஆதரவை தருவதாக உறுதி அளித்துள்ளோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பாஜக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தல் இம்மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலம் வாரியாக குடியரசு தலைவர் வேட்பாளர்கள் நேரில் சென்று சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இன்று காலை தமிழகம் வந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறினார்.
பின்னர், ராம்நாத் கோவிந்த், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை சந்தித்தார். ராம்நாத் கோவிந்துக்கு, முழு ஆதரவு அளிப்பதாக ஓ.பி.எஸ். மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உறுதி அளித்ததாக கூறினர்.
ராம்நாத் கோவிந்த் சந்திப்புக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் முழு ஆதரவையும் தருவதாக உறுதி அளித்தோம்.
நிபந்தனை ஏதும் விதித்துள்ளீர்களா என்ற செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம் என்று கூறினார்.
முன்னதாக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அவர் சந்தித்தார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கோரினார். பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.