அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கத்திப்பாரா விபத்து
கத்திப்பாரா அருகே பேருந்து மோதி பெயர் பலகை விழுந்து விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து கத்திப்பாராவில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி தூண் மீது மோதி ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சண்முகசுந்தரம் என்கிற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்படி விபத்தில் சாதாரண காயமடைந்த பேருந்தில் பயணம் செய்த நால்வர் முதலுதவி சிகிச்சைப்பின் வீடு திரும்பினர் என்ற செய்தி ஓரளவு ஆறுதல் அளிக்கக்கூடியது என்றாலும், மதுரவாயலைச் சேர்ந்த திரு. ஜான் பீட்டர் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மன வருத்தத்தை அளிக்கிறது.
அதி வேகமாக சென்ற பேருந்து
திரு. ஜான்பீட்டர் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.மேற்படி விபத்து ஏற்பட்டதற்குக் காரணம், அபாய வளைவில் அதிவேகமாக அரசுப் பேருந்தை இயக்கியதுதான் என்பதை பத்திரிகைகளில் வெளி வந்துள்ள செய்தி நமக்கு உணர்த்துகிறது. இதுபோன்ற விபத்து, வார நாட்களில் ஏற்பட்டு இருந்தால் உயிர்ச் சேதம் அதிகம் ஏற்பட்டிருக்கும் என்பதோடு, பலர் பலத்த காயமடைந்து இருப்பார்கள். இந்த விபத்தைப் பொறுத்தவரை, ஓட்டுநர் கைது செய்யப்பட்டு இருப்பததோடு, அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றாலும், இதுபோன்ற விபத்துகள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்குத் தேவையான அறிவுரைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
கத்திப்பாரா விபத்து.. நிவாரண தொகையை அறிவித்த முதல்வர் ஸ்டாலின் !
ரூ.25 லட்சம் இழப்பீடு
பொதுவாக, மிதமிஞ்சிய வேகம், சாலை விதிகளை மதிக்காமல் வண்டிகளை ஓட்டுதல், மது அருந்திவிட்டு ஓட்டுதல், முந்த வேண்டும் என்ற மனப்பான்மையுடன் வண்டி ஓட்டுதல் ஆகியவை தான் சாலை விபத்துகளை ஏற்படுத்துகின்றன. 'இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம்' என்பதற்கேற்ப விதிகளை சரியாக கடைபிடிக்கவும், சுயநினைவோடு வாகனங்களை ஓட்டவும், மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்கவும், முந்திக் கொண்டு செல்லும் மனப்பான்மையை தவிர்க்கவும் ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். 'வேகம் விவேகமன்று' என்பதை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் ஆழப் பதியச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தினால் மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதால், இந்த விபத்தில் உயிரிழந்துள்ள வாலிபர் திரு. சண்முகசுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையும், உரிய நிவாரணமும் அளிக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
இலங்கை அதிபருக்கு ஏற்பட்ட நிலை தான் திமுவிற்கும் ஏற்படும்...! ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி