பீட்டாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு; பீட்டாவின் உருவ பொம்மை எரிப்பு;

Asianet News Tamil  
Published : Jan 19, 2017, 11:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
பீட்டாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு; பீட்டாவின் உருவ பொம்மை எரிப்பு;

சுருக்கம்

சல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டாவின் உருவ பொம்மையை எரித்து இராமநாதபுரத்தில் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும் பீட்டா அமைப்புக்கு எதிராகவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.

இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பீட்டா அமைப்பின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் நடந்தது.

இதில் கூட்டமைப்பின் மண்டல செயலாளர் பத்மநாபன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜூ, தொகுதிச் செயலாளர் குமரன், தமிழக தேசிய முன்னணியின் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரபாகரன், மாநில செயற்குழு உறுப்பினர் டேவிட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் கோயில் அருகிலேயே சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வரை இருப்போம் என்று கூறி அமர்ந்திருந்தனர்.

இதேபோன்று, அரசுப் போக்குவரத்துக் கழக இராமநாதபுரம் புறநகர் கிளை முன்பாக பெரியார் நகர்,முல்லை நகர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளுடன் அமர்ந்திருந்தனர்.

கீழக்கரையிலிருந்து பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 25 கி.மீ. தூரம் வரை நடந்தே வந்து இராமநாதபுரம் அம்மா பூங்காவில் அமர்ந்திருந்தனர். அம்மா பூங்காவிலிருந்து பாரதிநகர் வரை ஏராளமான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் மதிமுக இளைஞரணி அமைப்பாளர் கரு.சுப்பிரமணியன், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் ஆத்ம.கார்த்திக், த.மா.கா. மாவட்டத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, வழக்குரைஞர்கள் சோமசுந்தரம், முனியசாமி ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர்கள் ஜெ.தினேஷ்பாபு, ஆ.சண்முகராஜேஸ்வரன், தேமுதிக நகர் தலைவர் முத்தீஸ்வரன் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்மா பூங்காவிலும், பட்டினம் காத்தான் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாகவும் சல்லிக்கட்டுக்கான தடை நீங்கும் வரை இதே இடத்தில் அமர்ந்திருப்போம் என்று கூறி அமர்ந்திருந்தனர். 

சேதுபதி அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர். ராமநாதபுரம் அரசு வழக்குரைர்கள் யாரும் பணிக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கமுதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். முதுகுளத்தூர் நீதிமன்றம் முன்பாக வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் டி.ராஜசேகர் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

PREV
click me!

Recommended Stories

குடும்பத்தினருக்கு மட்டுமே பதவியா? எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய சரத்குமார்
பதநீர் இறக்கியவரை சுடச்சொன்னது யார்?! இந்த ஆட்சியை நாம் டிஸ்மிஸ் செய்வோம்.!