உஷார்..!!! மீண்டும் தொடங்கியது ஆன்லைன் முறைகேடு..!! - கம்ப்யூட்டர் சென்டரில் ரயில் டிக்கெட் விற்பனை

First Published Jan 10, 2017, 1:03 PM IST
Highlights


அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் அனுமதியின்றி ஆன்லைனில் ரயில் டிக்கெட்கள் விற்பனை மீண்டும் தொடர்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

ரயில் டிக்கெட்டுகள் விற்பனை மற்றும் முன்பதிவு செய்ய சில தனியார் ஆன்லைன் மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுப் புறப்பகுதிகளில் உள்ள சில கம்ப்யூட்டர் மையங்களில், எவ்வித அனுமதியுமின்றி ரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் போலி ஆவணங்கள் பயன்படுத்தி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுபோல் ரயில்வே பாதுகாப்புபடை போலீசாருக்கு தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரிக்க தொடங்கினர். இதையடுத்து, கம்ப்யூட்டர் சென்டர்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மேற்கண்ட தவறுகள் நடப்பது உறுதியானது.

தொடர்ந்து போலீசார் ஏராளமான ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விற்பனைக்கான அனுமதி பெறாமல், கம்ப்யூட்டர் சென்டர் நடத்துபவர்களுக்கு எப்படி டிக்கெட் கிடைத்தது, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அதில், ரயில்வேயில் வேலை பார்க்கும் சிலருக்கு, இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதுபற்றி ரயில்வே பாதுபாப்புப்படை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் முடிவு இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை உள்பட பல இடங்களில் கடந்த சில மாதங்களாக அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் ஆன்லைன் ரயில் டிக்கெட் விற்பனையில் முன்பு நடந்த முறைகேடுகள் மீண்டும் தொடர்கிறது. இதனால் முறையாக அனுமதி பெற்று நடத்துபவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கம்ப்யூட்டர் மையங்களில் மீண்டும் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

click me!