ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல பேசுகிறார்; என்னைப் பார்த்தாலே அவருக்கு பயம் - தினகரன் 'தில்' பேச்சு...

By Suresh ArulmozhivarmanFirst Published Sep 3, 2018, 8:23 AM IST
Highlights

மன்னார்குடியில் கூட்டம் போட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல பேசியுள்ளார். அவருக்கு என்னைக் கண்டாலே பயம்" என்று  திருவாரூரில் தமிழக அரசைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
 

திருவாரூர்

மன்னார்குடியில் கூட்டம் போட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல பேசியுள்ளார். அவருக்கு என்னைக் கண்டாலே பயம்" என்று  திருவாரூரில் தமிழக அரசைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "கடைமடைக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும்" நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் எம்.எல்.ஏவுமான டி.டி.வி.தினகரன் பங்கேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியது: "நாங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை.  மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடலுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அத்தண்ணீரை கடைமடைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

'ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம்' என்று சொல்லிக்கொண்டு தாங்களும், தங்கள் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று தமிழகத்தையே சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். குடிமராமத்துப் பணிகள், தூர்வாரும் பணிகள் என்றெல்லாம் கூறி நிதி ஒதுக்குகின்றனர். ஆனால், அதற்கான பணிகளை செய்யாமல் அந்நிதியைக் கொள்ளையடிக்கின்றனர். 

பல வருட போராட்டத்திற்குபின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில தேர்தலுக்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை பா.ஜ.க. இழுத்தடித்ததை நாம் மறக்க கூடாது.

234 தொகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கிற நல்ல தீர்ப்பு பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கிடைக்கும். அப்போது தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அன்றே தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும்.

கடலூர், நாகப்படினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் பூமிக்கு அடியில் நிலக்கரி எடுக்க நிலங்களைத் தேர்வுச் செய்துள்ளார்கள். விவசாய நிலங்களுக்கு அடியில் இருந்து வைரமே கிடைத்தாலும் தேவையில்லை. டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களைக் காப்பாற்ற வேண்டும். டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள்தான் நடக்க வேண்டும். 

எட்டு வழிச் சாலை தொலைநோக்குத் திட்டம் என்று ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களால் ஆற்று நீரை தேக்கி வைக்க முடியவில்லை. ஊழலைத் திசைத் திருப்ப ஊர் ஊராக சுற்றி வருகிறார்கள். 

மன்னார்குடியில் கூட்டம் போட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல பேசியுள்ளார். என்னை பார்த்தாலே அவருக்கு பயம்" என்று  டி.டி.வி. தினகரன் பேசினார்.

click me!