
செவிலியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்து ஹைகோர்ட் உத்தரவிட்டதைதொடர்ந்து கடந்த 3 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை செவிலியர்கள் வாபஸ் பெற்றனர்.
மருத்துவர் தேர்வு ஆணையத்தின் மூலம் 2015ம் ஆண்டு செவிலியர்களாக 11,000க்கும் அதிகமானோர் பணியில் அமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களுக்கு இன்னமும் பணி நிரந்த ஆணை வழங்கப்படவில்லை. ஏழாயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களாக செவிலியர்கள் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து நேற்று செவிலியர்களின் போராட்டம் குறித்து அவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு பிரிவினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று பொது சுகாதாரத்துறை போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியது. அதில் இன்று பணிக்கு திரும்பவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இதனிடையே கணேஷ் என்பவர் செவிலியர்கள் போராட்டம் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உங்களுக்கு ஊதியம் போதவில்லை என்றால் பணியை விட்டு செல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் செவிலியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அத்தியாவசிய பணி செய்யும் செவிலியர்களின் குறை தீர்க்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி செவிலியர்கள் 3 நாள்கள் நடைபெற்று வந்த போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.