சிலைத் திருட்டில் ஈடுபடுவோர்மீது அரசியல் குறுக்கீடு இல்லாத விசாரணை நடக்க வேண்டும் - சிலை பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை...

First Published Dec 27, 2017, 9:56 AM IST
Highlights
No political interference should be investigated on the idol of thieves.


தஞ்சாவூர்

சிலைத் திருட்டில் ஈடுபடுவோர் மீது அரசியல் குறுக்கீடு இல்லாத விசாரணை நடக்கும் வகையில் சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று சிலைகள் பாதுகாப்பு, திருவிழா, வழிபாடு குறித்த பொதுக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் கும்பகோணத்தில் திருக்கோயில்களின் சிலைகள் பாதுகாப்பு, திருவிழா, வழிபாடு குறித்த பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருப்பாலைத்துறை தேவார மாணவர்களின் திருமுறை பாராயணம் நடைபெற்றது. இதில், பிஏபி சண்முகம் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் பேசியது:

"தமிழகத்தில் சிலை திருட்டில் ஈடுபடுவோரை கைது செய்து, தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பணி பாராட்டுக்குரியது.

இங்கிருந்து சிலைகளை கொண்டுச் செல்ல முடியாத அளவுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே பழைமையான கோயில் சிலைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

சிலைத் திருட்டில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அரசியல் குறுக்கீடு இல்லாத விசாரணையும், ஏற்கெனவே பிடிபட்டுள்ளவர்களை தீவிர விசாரணை செய்ய போதிய அவகாசமும் வழங்கும் வகையில் சட்டங்கள் வேண்டும்.

சிலைகளுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கோயில்களிலிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பு கூடங்களில் வைத்துவிடுவதால் கோயில் பூஜைகள், திருவிழாக்கள், பாரம்பரிய நிகழ்வுகள் தடைபடுகிறது. இதனை ஏற்க இயலாது. இதனால் கோயில்களின் நோக்கமே சிதைகிறது.

மேலும், திருவிழாக்களுக்கு கொடுத்து வாங்கும் நடைமுறையிலும் கெடுபிடி காட்டுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். திருவிழாக்களால் தான் சமூக ஒற்றுமை ஏற்படுகிறது. அதை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். கூட்டத்தின் இறுதியில் சிவக்குமார் நன்றித் தெரிவித்தார்.

click me!