
இராமநாதபுரம்
ஒரு மனிதன் அரசாங்கத்தின் கொள்கை, செயல்பாடுகளை எவ்வளவு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தாலும் அது தேசத்துரோகம் ஆகாது என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமான், அமீர் ஆகியோரை விடுதலை செய்த நீதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இராமேசுவரத்தில் கடந்த 2008–ஆம் ஆண்டு அக்டோபர் 19–ஆம் தேதி தமிழ் திரையுலகத்தின் சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை இராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு மற்றும் சீமான், அமீர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனையொட்டி சீமான், அமீர் ஆகியோர் இராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் ஆஜரானார்கள்.
அப்போது நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்த தீர்ப்பு:
“இராமேசுவரம் பொதுக்கூட்டத்தில் சீமான், அமீர் ஆகியோர் வன்முறையை ஆதரித்தோ, வன்முறையை வலியுறுத்தியோ, தூண்டிவிட்டோ பேசவில்லை என்பது தெளிவாகிறது.
இலங்கை தமிழர்களின் நிலையைக் கண்டு தமிழன் என்ற உணர்வில் புலம்பியதாகத்தான் கருதவேண்டும். மேலும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்திய அரசு எளிதாக இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு பெற்றுத்தர முடியும் என்று இந்திய அரசின் மீது பெரும் நம்பிக்கை கொண்டுதான் பேசியுள்ளனர். கூட்டம் நடந்து முடிந்து இதுவரை இவர்களின் பேச்சால் எவ்வித வன்முறையோ, அசம்பாவித சம்பவங்களோ நடைபெறவில்லை.
தடைச் செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியது மட்டும் குற்றமாகி விடாது. சமூக பொறுப்புள்ள ஒரு மனிதன் அரசாங்கத்தின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் எவ்வளவு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தாலும், குத்திக்காட்டினாலும், சுட்டிக்காட்டினாலும், புத்தகம் எழுதினாலும், சினிமா எடுத்தாலும் அது தேசத்துரோகம் ஆகாது. அது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் ஆகாது.
இதுபோன்ற காரணங்களின் அடிப்படையில் சீமான், அமீர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து இருவரையும் விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்.
2008–ஆம் ஆண்டு அக்டோபர் 24–ஆம் தேதி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அக்டோபர் 24–ஆம் தேதி அதே நாளில் இந்த வழக்கில் இருவரையும் விடுதலை செய்கிறேன்” என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.