பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனிடையே, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்து விட்டது.
மறுபுறம், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால், கூட்டணியில் இணைய அதிமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டது. எனவே, எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் அந்த இரு கட்சிகளும் தங்களது தலைமையில் தனித்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது.
undefined
பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி.சண்முகதின் புதிய நீதிக்கட்சி, பச்சமுத்துவின் ஐ.ஜே.கே., ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
அதிமுகவை பொறுத்தவரை பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல், பாமக, தேமுதிக ஆகிய இருகட்சிகளுடன் பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் சிறிய கட்சிகள் என்பதால், பாமக, தேமுதிக கட்சிகளுடனான கூட்டணியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கூட்டணி உறுதி என்ற நிலைபாட்டினை எட்டியுள்ளோம். அதிமுகவுடன் தேமுதிக வெற்றிக்கூட்டணியாக அமையும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் குறித்து பேசப்படும்.” என அதிமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 25ஆவது முறையாக நீட்டிப்பு!
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போன்றே, கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக இருப்பதாகவும், மாநிலங்களவை சீட்டை தேமுதிகவுக்கு தர அதிமுக மறுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
இதன் எதிரொலியாக, அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக, மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. அத்துடன், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை, தேமுதிக நிறுத்திக் கொண்டதாகவும், அதிமுகவை கழற்றி விட்டு, பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் தொடர்பாக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தாங்கள் நேரம் எதுவும் தரவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.