உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை... இன்றும் கொட்டப் போகுது கன மழை!

Asianet News Tamil  
Published : Nov 07, 2017, 09:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை... இன்றும் கொட்டப் போகுது கன மழை!

சுருக்கம்

new depression formed in srilankan coast heavy rain expected in coastal tamilnadu

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியிருப்பதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடமேற்குப்  பருவ மழை துவங்கியதில் இருந்து தமிழகத்தில் நல்ல மழைப் பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக,  கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  சென்னையில், கடந்த திங்கள் கிழமை முதல் ஒரு வாரத்துக்கும் மேல் கன மழை இடைவெளி விட்டு பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருகியது. இதை அடுத்து, அதிரடியாகக் களம் இறங்கிய அரசு நிர்வாகம், பல இடங்களில் வெள்ள நீரை வெளியேற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுட்டது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்காமல் போக்குவரத்து சரியானது. 

இந்நிலையில், இன்றும் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  புதிதாக, இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், இன்றும் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இன்று மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக பள்ளிகள் செயல்படாத நிலையில், இன்று மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிகளுக்குச் சென்றனர். மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டால் அந்த அந்தப் பள்ளிகள் தங்கள் நிலைக்கு ஏற்ப விடுமுறை அறிவித்துக் கொள்ள உத்தரவிடப் பட்டுள்ளது. 


வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், செய்தியாளர்களிடம் இது குறித்துத் தெரிவித்த போது,  


கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. ஒருசில  இடங்களில் கனமழை பதிவானது. 
அதிகபட்சம் நாகை மாவட்டம் ஆணைக்காரன்சத்திரத்தில் 19 செ.மீ மழை பெய்தது. அடுத்து வரும் 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும்  உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யும். தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். மற்ற உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.  
சென்னையில் இடைவெளிவிட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யும். சில சமயங்களில் சற்று பலத்த மழை பெய்யும்’ என்றார். 

 

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!