
கல்யாணமாகி பத்து நாட்களில் கணவனே தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே செட்டிமூலையை சேர்ந்தவர் வீராசாமி. விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு தீபலட்சுமி என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில், வீராசாமியின் மகள் லட்சுமிக்கும் திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜேந்திரனுக்கும் கடந்த மே மாதம் 25-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மணமகள் தீபலட்சுமி வீட்டில் விருந்து முடிந்து வீடு திரும்பிய போது, ராஜேந்திரன் தீபலட்சுமியிடம் இருந்து நகையை வாங்கி அடமானம் வைத்து சரக்கு அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், அன்று இரவு 11 மணியளவில் மனைவி தீபலட்சுமியை அழைத்து கொண்டு தலைக்காடு பகுதியில் உள்ள தனது இரண்டு நண்பர்களிடம் விட்டு விட்டு ராஜேந்திரன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் தீபலட்சுமி சுமார் 2 மணியளவில் வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்போது தன்னை 2 நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி கணவரிடம் சண்டை போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், “இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது. சொன்னால் கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டி மனைவியை ராஜேந்திரன் விடிய விடிய தாக்கியதாக தெரிகிறது. மேலும் லட்சுமியின் முகத்தை உரலை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தீபலட்சுமிக்கு முகம், தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து லட்சுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு பெற்றோர்களும், மற்றும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் லட்சுமியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணமான 2-வது வாரத்தில் புதுப்பெண்ணை நண்பர்களுக்கு விருந் தாக்கிய கணவர் ராஜேந்திரன் குறித்து தலை ஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தலை ஞாயிறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.