
கடந்த 3 நாட்களுக்கு முன் நடுக்கடலில் தமிழக மீனவர்கள், மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், மீன் பிடித்து கொண்டிருந்தவர்களை நோக்கி சுட்டனர். இதில், தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற வாலிபர் பலியானார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள், இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஒருநாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என அறிவித்துள்ளனர்.