திருச்சி
திருச்சியில் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துகொண்டு வந்த பெண்ணிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை திருடிக் கொண்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரான்ஸிஸ் சேவியர். இவரது மனைவி அருள்மேரி. இவர் நேற்று மணப்பாறை இந்தியன் வங்கிக் கிளையில் தனது நகையை அடகு வைத்துவிட்டு ரூ. 20 ஆயிரம் பணத்தை தனது பையில் எடுத்துக் கொண்டு வங்கியைவிட்டு வெளியே வந்தார்.
இவரிடம் பணம் இருப்பதை நோட்டமிட்டு அறிந்து கொண்ட பமர்மநபர்கள் இரண்டு பேர் அருள்மேரியை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அருள்மேரி பெரியார் சிலை ரௌண்டானா அருகே வந்ததும், அவரிடமிருந்த பணப்பையை மர்ம நபர்கள் இருவரும் பறித்த கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.
பணப்பை பறிபோனதை அறிந்து அலறிய அருள்மேரியின் சத்தத்தை கேட்டு கூடிய பொதுமக்கள் மர்ம நபர்களை விரட்டிச் சென்றனர். ஆனால் அவர்களால் மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை.,
அதன்பின்னர் அருள்மேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள், திருட்டு நடந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.