
எனது தங்கைகள் அனிதாவும், ப்ரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர் என ஜி.வி.பிரகாஷ்குமார் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை. இதில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அதேபோன்று விழுப்புரம் செஞ்சி அருகே மேல்சேவூரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண் பெற்றவர் ஆவார். கடந்த ஆண்டு சித்தா படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டுமென்று, இந்தாண்டு பிரதீபா நீட் தேர்வு எழுதியிருந்தார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் போதிய பணம் இல்லாததால் அரசு கல்லூரியில் இந்த சேர்ந்து விடலாம் என காத்திருந்தார்.
இந்த நிலையில் அரசு கல்லூரியில் சீட் பெறும் வகையில் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதிய பிரதீபாவுக்கு 39 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆண்டு தோறும் நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், இது குறித்து இசையமைப்பாளரும் அனடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ட்விட்டரில் வேதனையோடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரில் ட்விட்டர் பதிவில், தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்த பின் போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும்... எனது தங்கைகள் அனிதாவும், ப்ரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர்... பல கனவுகளோடு படித்த எம் மாணவர்களின் உயிர்வலி உணர மறுப்பதும் குற்றமே... #NEETResults #NeetKillsPradeeba