
தேனியில், வேலைக்கு வரச்சொன்ன அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை கம்பால் அடித்து கொன்ற தொழிலாளி உள்பட ஐந்து பேரை காவலாளர்கள் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் விஸ்வன் குளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் மாரியப்பன் (58). இவர் சின்னமனூர் நகராட்சியின் 18–வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
இவருக்கு கேரள மாநிலத்தில் ஏலக்காய் தோட்டம் உள்ளது. இதற்காக சின்னமனூரில் இருந்து தொழிலாளர்களை ஜீப்பில் அழைத்துச் செல்வது வழக்கம்.
அதில் சின்னமனூர் அருகேயுள்ள ஒத்தவீட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல் (32) என்பவரை வேலைக்கு அழைத்துள்ளார். அவருக்கு இரண்டு நாள்களுக்கு தலா ரூ.400 வீதம் ரூ.800 கூலியை முன்கூட்டியே மாரியப்பன் கொடுத்துள்ளாராம். ஆனால், கூலியை வாங்கி கொண்டு சக்திவேல் வேலைக்கு செல்லவில்லையாம் என்று காவலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அவரை வேலைக்கு வருமாறு கடந்த 24–ஆம் தேதி மாரியப்பன் அழைத்துள்ளார். இதில் கோபமடைந்த சக்திவேல், அவருடைய உறவினர்கள் முருகன், கார்த்திக், பொன்னுச்சாமி, தங்கவேல் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து மாரியப்பனை கம்பால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த மாரியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும், சிகிச்சைப் பலனின்றி நேற்று மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னமனூர் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து தலைமறைவான சக்திவேல் உள்பட ஐவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.