கொலை செய்யப்பட்ட எஸ்டேட் காவலாளி செல்போனில் கொலையாளி கைரகை?

Asianet News Tamil  
Published : Apr 27, 2017, 08:02 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
கொலை செய்யப்பட்ட எஸ்டேட் காவலாளி செல்போனில் கொலையாளி கைரகை?

சுருக்கம்

Murder killer in murdered cell phone

நீலகிரி

கொலை செய்யப்பட்ட கோடநாடு எஸ்டேட் காவலாளியின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், கொலையாளிகளின் கைரேகை பதிவாகி இருக்கிறதா? என்று கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொள்ளையர்கள் போலி எண் பொருத்திய காரில் தப்பிச் சென்றுள்ளனர் என்றும், அவர்கள் தடயங்கள் எதுவும் சிக்காமல் இருக்க கையுறை அணிந்து வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.

இந்த எஸ்டேட்டின் பத்தாவது நுழைவு வாயிலில் பணியில் இருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த காவலாளி ஓம்பகதூர் என்பவர் கடந்த 24–ஆம் தேதி அதிகாலையில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

அப்போது, ஒன்பதாவது நுழைவு வாயில் காவலாளி கிருஷ்ணபகதூரையும் அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் மயக்க மருந்தைத் தெளித்து அவரது கைகளில் கத்தியால் குத்தி உள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் பிரதான நுழைவு வாயில் வழியாக உள்ளேச் சென்று பங்களாவின் மூன்று அறைகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஆவணங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இந்த வழக்கில் கொலையாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக காவல் வட்டாரங்கள் தெரிவிப்பது:

“கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கைத் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தபோது பங்களாவின் அருகில் செடிகளின் மறைவில் இருந்து ஒரு செல்போன் கண்டெடுக்கப்பட்டது. அந்த செல்போன் கொலை செய்யப்பட்ட காவலாளி ஓம்பகதூருக்கு சொந்தமானதாகும்.

அந்த செல்போனில் கொலையாளிகளின் கைரேகை பதிவாகி இருக்கிறதா? என்பதை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அது மட்டுமின்றி அந்த செல்போனில் இருந்து சம்பவத்தன்று வேறு யாருக்கும் அழைப்பு சென்று இருக்கிறதா? அந்த செல்போன் எண்ணுக்கு வேறு யாரும் தொடர்பு கொண்டார்களா? என்பது பற்றி குற்றப் பிரிவு காவலாளர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

மேலும், கோடநாடு எஸ்டேட்டில் வேலைப் பார்க்கும் அனைத்து ஊழியர்களின் செல்போன் எண்ணுக்கும் வந்த அழைப்புகள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

கொள்ளை நடந்த பங்களாவில் ஜெயலலிதா உபயோகப்படுத்திய அறை பற்றி அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும்.

இந்த நிலையில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அந்த அறை கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதற்கு எஸ்டேட்டில் பணியாற்றியவர்களில் யாருக்காவது தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வார்விக் என்ற இடத்தில் தேயிலை செடிகளின் மறைவுக்குள் இருந்து காரின் போலி நம்பர் பிளேட் ஒன்றும், கையுறை ஒன்றும் சிக்கின.

இதை வைத்து பார்க்கும் போது எஸ்டேட் காவலாளியை கொன்ற கும்பல் காரில் போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி தப்பி சென்று இருக்கிறார்கள். மேலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் காவலாளர்களிடம் தடயங்கள் சிக்காமல் இருக்க கையுறை அணிந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுதவிர சம்பவம் நடந்த நேரத்தில் கோடநாடு – கோத்தகிரி இடையே கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வாகனங்களின் நம்பர் பிளேட் எண்ணை பயன்படுத்தி, அவர்களை பற்றி காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு சில வாகனங்களை சந்தேகத்தின் பேரில் கருதி ரகசியமாக விசாரித்து வருகிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது” என்று தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

ஐபோன் தயாரிப்பதே தமிழ் பெண்கள் தான்! மகளிர் மாநாட்டில் பாஜக-வைச் சீண்டிய முதல்வர் ஸ்டாலின்!
கமலாலயம் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை வெளியிடும் இபிஎஸ்.. சொல்வதெல்லாம் பொய்.. முதல்வர் ஸ்டாலின் தாக்கு!