தஞ்சாவூர்
தஞ்சாவூரில், குடியிருக்கும் வீடுகளை இடிக்கப்போவதாக அறிவித்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் 25 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
undefined
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் குளக்கரை, வாய்க்கால் கரையோரம் இருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவ்வுத்தரவின்படி கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்கால் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் வேலையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களே தங்கள் வீடுகளை அகற்றும் வகையில் அப்பகுதியில் குடியிருந்தவர்களுக்கு கும்பகோணத்தை அடுத்த சேஷம்பாடி கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டாவை வருவாய்த்துறையினர் வழங்கினர்.
இதற்கான விழா கடந்த 7-ஆம் தேதி கும்பகோணம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்று பட்டாக்களை அளித்தார்.
பட்டா பெற்றவர்கள் ஆறு மாதத்திற்குள் வீடு கட்ட வேண்டும் என்றும், இல்லையென்றால் பட்டா திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், பட்டாவுக்கான நிலம் இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், ஓலைப்பட்டினம் வாய்க்கால் கரையில் ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள் நாளை இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் அனைத்து வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சியின் இந்த அறிவிப்பைக் கண்டித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாக்களுடன் நேற்று கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் தாசில்தார் வெங்கடாசலம் பேச்சுவாத்தையில் ஈடுபட்டார். அப்போது அவர், "நகராட்சி ஆணையரை அழைத்து பேசுவதாகவும், அதுவரை வீடுகள் இடிக்கப்படாது" என்றும் உறுதியளித்தார்.
இதனையடுத்து தொடர்ந்து நகராட்சி ஆணையரை சந்திக்க சென்ற பெண்கள், அங்கு ஆணையர் இல்லாததால் ஆத்திரமடைந்தனர். பின்னர் பெண்கள் அனைவரும் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி, ஆய்வாளர் மகாதேவன் ஆகியோர் கலைந்து செல்லும்படி கூறினர். இதனால் பெண்களுக்கும், காவலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது ஆண் காவலாளர்கள், தங்களை இடித்துத் தள்ளுவதாக பெண்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள், மறியலில் ஈடுபட்ட பெண்கள் 25 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.