மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையின்றி தவிப்பு...

First Published Apr 20, 2018, 8:27 AM IST
Highlights
More than 50 thousand people unemployed by ban fishing


நாகப்பட்டினம்
 
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் நாகை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர்.  

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், கடந்த 1983-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரையான 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. ஆனால், கரை பகுதிக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் சிறியவகை படகுகள் கடலுக்கு செல்லலாம்.

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த தடைய்க் காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். 

இதில் படகை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள பழுதினை வெல்டிங் செய்து சரி செய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாகை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் மீனவர்கள் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 நாகை மாவட்டத்தில் 1600 விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலத்தால் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர்.  

click me!