
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட வீட்டுத் தகராறில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதால் அவரின் தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்று அவரின் உடலை வாங்காமல் உறவினர்கள் மற்றும் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தை அடுத்த பிச்சிவாக்கம் துர்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி முத்து (45). இவர் அதே பகுதியில் உள்ள தனது இடத்தில் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி வந்தார்.
இந்த நிலையில் அவர், அருகிலுள்ள அரசு புறம்போக்கு இடத்தைச் சேர்ந்த நான்கு அடி பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டி வந்தாராம். இதனால் முத்துவுக்கும், அவரது வீட்டின் அருகே வசிப்பவருக்கு கடந்த சில நாள்களாக தகராறு இருந்தது.
முத்து அரசு இடத்தில் வீடு கட்டி வருவதாக அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, வீடு கட்டும் பணியை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுத்தியுள்ளனர்.
இதில் மன உளைச்சல் அடைந்த முத்து திங்கள்கிழமை மாலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் காவலாளர்கள், முத்துவின் சடலத்தை மீட்டு திருபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், முத்துவின் தற்கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முத்துவின் சடலத்தை வாங்க மறுத்து பிச்சிவாக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.