எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவு திறக்க தடை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி...!

By vinoth kumarFirst Published Nov 19, 2018, 4:22 PM IST
Highlights

சென்னை கடற்கரை சாலையில் கட்டப்படும் எம்.ஜி.ஆர். விழா வளைவை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவின் கட்டுமானப் பணிகளுக்கு தடை இல்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சென்னை கடற்கரை சாலையில் கட்டப்படும் எம்.ஜி.ஆர். விழா வளைவை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவின் கட்டுமானப் பணிகளுக்கு தடை இல்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். பாதி கட்டப்பட்டுள்ள நிலையில் வழக்கு முடியும் வரை எம்ஜிஆர் வளைவை திறக்க கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

முன்னதாக சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் மனுதாரர் ஏற்கனவே காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளதாகவும், சாலை மேம்பாட்டை தவிர்த்து எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தில், சாலைகளின் குறுக்கே, சாலையோரங்களில் எந்த நிரந்தர கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், அந்தச் சட்டத்தை மீறி சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். 

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை கடற்கரை சாலையில் கட்டப்படும் எம்.ஜி.ஆர். விழா வளைவை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவை திறப்பது உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இழப்பீடு தொகை கோடிக்கணக்கில் வழங்க இயலாத நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் நோக்கம் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டும். மேலும் கட்டுமானப் பணிகளை முடித்துக்கொள்ளலாம் ஆனால் திறக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 21-க்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

click me!