
விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த இருந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழகக் காவல் துறையை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எச்சரித்துள்ளார்.
தமிழர்களுக்கு ஆதரவாக எப்போதும் குரல் கொடுப்பவர் மார்க்கண்டேய கட்ஜு. இவர் எப்போதும் தமிழக அரசியல் குறித்தும், தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை குறித்தும் பல்வேறு கருத்துக்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுவார்.
இந்நிலையில் தற்போது பரபரப்பாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் குதித்துள்ள மாணவர்களுக்கு ஆதரவாக தனது பதிவினை குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல தடவை குரல் எழுப்பியுள்ளார். அப்போதும் அங்கு போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக தனது குரலினை உயர்த்தினார்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த இருந்த இளைஞர்களை தடுத்து நிறுத்திய தமிழக போலீசாருக்கு எதிராக தனது பதிவினை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கட்ஜூ பதிவிட்டுள்ளாவது,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, எந்த ஆயுதமும் இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒய்.எம்.சி,ஏ மைதானத்தில், நிர்வாகத்தின் அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இக்கூட்டம் நடைபெற இருந்தது.
தமிழகம் முழுவதிலிருந்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கு பெற இருந்த நிலையில், ஒய்.எம்.சி.ஏ நிர்வாகத்திடம் அனுமதியை ரத்து செய்ய காவல்துறை கட்டாயப்படுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ நிர்வாகம் ஏற்கனவே இளைஞர்களுக்கு வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்துள்ளனர்.
வேறு இடம் கிடைக்காத நிலையில் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 19(1)(b) யின் படி அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் அமைதியாக கூட்டம் கூடுவதற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
விதி 19(3)யின் படி பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு தடைவிதிக்க வழி இருக்கிறது.
ஆனாலும் விவசாயிகளுக்காக கோரிக்கை வைக்கும் இளைஞர்கள், பொதுமக்களின் அமைதிக்கு எந்த விதத்திலும் பங்கம் விளைவிக்கவில்லை. அவர்களிடம் ஆயுதம் இல்லை, சாலை மறியல் செய்யவில்லை, எந்த அசம்பாவிதத்திற்கும் இடம் அளிக்கவில்லை.
அமைதி வழியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் விவசாயிகளுக்காக இளைஞர்கள் கூட்டம் நடத்துவதை, தடுத்து நிறுத்திய காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று மார்க்கண்டேய கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், இந்தியா சர்வாதிகார நாடு அல்ல, இளைஞர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் விதி 19(1)(b) யின் படி இளைஞர்களுக்கு உள்ள உரிமைகளை தமிழக காவல்துறை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்று எனக்கு புரியவில்லை.
இந்திய குடிமக்களாகிய இந்த இளைஞர்களின் அடிப்படை உரிமைகளை தமிழகக் காவல்துறை பறித்துள்ளதாக அறிகிறேன். இது சட்டத்திற்கு புறம்பானது,
தமிழக இளஞர்களின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை தமிழகக் காவல்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
மீறினால் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அந்த பதிவில் கட்ஜூ கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மார்க்கண்டேய கட்ஜூ, வரும் ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டாவில் #SaveTamilNaduFarmer மற்றும் அட்லாண்டா தமிழ் மக்கள் அமைப்புகளின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழக விவசாயிகளின் நிலை குறித்து விரிவாக பேச உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்ளார்.