
தமிழகத்தில் மோடி பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு 5 நாட்களாக பிரதமர் மோடி தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, சேலம் என தொடர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியில் மோடி கலந்து கொண்டார்.
சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணியாக சென்றவர் பொதுமக்களை சந்தித்தார். வாகன பேரணியின் இறுதியாக கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கோவை குண்டுவெடிப்பு- மோடி அஞ்சலி
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 1998 ல் நிகழ்ந்த கோயம்புத்தூர் தீவிரவாத குண்டுவெடிப்புகளை மறக்க முடியாது. இன்று இந்த நகரத்திற்கு வந்திருக்கும் போது, அந்த குண்டுவெடிப்புகளில் நம்மை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன் என குறிப்பிட்டு இருந்தார். இந்தநிலையில் இது தொடர்பாக விமர்சனம் செய்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், இதே போல, குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், ஒக்கி புயலில் இறந்தவர்கள், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மத வெறுப்புணர்வை தூண்டும் மோடி
10 ஆண்டு பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழலும், 8 ஆயிரம் கோடி தேர்தல் பத்திர மோசடியையும் தவிர தாங்கள் சாதித்ததாக சொல்லிக்கொள்ள வேறெதுவும் இல்லை. அதனால் வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார். இது இந்த தேர்தலில் எடுபடாது என மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் - உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி!