
கரூர் அருகே திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் அள்ளி வந்த லாரிகளை சிறைபிடித்து ஓட்டுனர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கடந்த சில தினங்களாக மண்மங்கலத்தை அடுத்த பெரியவடுகபாட்டியில் மணல் கொள்ளை நடைபெற்று வந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய்தூறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலையில், மணல் ஏற்றி வந்த 8 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீசாருக்கும் வட்டாட்சியருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மண்மங்கலம் வட்டாட்சியர் ராம்குமார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது லாரி ஓட்டுனர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரி ஓட்டுனர்களை வட்டாட்சியர் முன்பே சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.
இதையடுத்து பொதுமக்களிடம் அதிகாரிகள் சமாதானம் பேசினர். மேலும் லாரிகளை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.