
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வகையில், "உலகம் உங்கள் கையில்" என்ற புதிய திட்டத்தின் கீழ் 10 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் (Laptops) வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் லேப்டாப்களை வழங்கினார். மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் இந்த மெகா திட்டத்தின் முதற்கட்டமாக, இன்று 10 லட்சம் மாணவர்களுக்கு விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
“அரசு வழங்கும் இந்த லேப்டாப் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு 'கேம் சேஞ்சராக' அமையும். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஒரு சிறிய லேப்டாப்பில் தான் தொடங்கப்பட்டன.
1946-ல் தந்தை பெரியார் 'இனி வரும் உலகம்' என்ற உரையில், உருவத்தைப் பார்த்துப் பேசும் கருவி (Video Call) வரும் என்று அன்றே கணித்தார். அவர் சொன்ன அறிவியல் மாற்றங்கள் இன்று உங்கள் கையில் லேப்டாப்பாக உள்ளது.
“திராவிட இயக்கம் எப்போதும் அறிவியலைக் கொண்டாடும் இயக்கம். கலைஞர் அவர்கள் 1997-லேயே ஐடி பாலிசியைக் கொண்டு வந்து தமிழகத்தை ஐடி துறையில் முன்னோடியாக மாற்றினார். அதன் தொடர்ச்சியாகவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களில் Intel i3/AMD Ryzen 3 Processor, 8GB RAM, 256GB SSD போன்ற நவீன வசதிகள் உள்ளன. மேலும், இதில் கூடுதல் சிறப்பம்சமாகச் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளான Perplexity Pro-வின் 6 மாத சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
"கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து" என்ற முதல்வரின் தாரக மந்திரத்தை முன்வைத்து, தமிழக மாணவர்களை உலகத்தரம் வாய்ந்தவர்களாக மாற்ற இந்தத் திட்டம் வழிவகுக்கும் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.