பட்டா கத்திகளுடன் ரவுடிசம் பண்ணும் மாணவர்கள்... அராஜகத்தால் அலறும் பொதுமக்கள்!

By vinoth kumarFirst Published Aug 30, 2018, 12:49 PM IST
Highlights

சென்னையில் மாநகர பேருந்தில் பட்டா கத்திகளுடன் கல்லூரி மாணவர்கள் சிலர் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். மாணவர்கள் கத்திகளுடன் பேருந்தில் பயணம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் மாநகர பேருந்தில் பட்டா கத்திகளுடன் கல்லூரி மாணவர்கள் சிலர் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். மாணவர்கள் கத்திகளுடன் பேருந்தில் பயணம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் தினந்தோறும் லட்சகணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனிடையே கல்லூரி மாணவர்கள் சிலர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தி, கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் பயணம் செய்யும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. 

இந்நிலையில் இந்தாண்டு கல்லூரி தொடங்கிய முதல் நாளே, சில மாணவர்கள் பட்டா கத்திகளுடன் பயணம் செய்தனர். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கத்திகளுடன் பயணம் செய்த 50 மாணவர்களை பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்த கத்திகள், கோடாரிகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில் திருவள்ளூரில் இருந்து பிராட்வே நோக்கி வந்த அரசு பேருந்தில் பட்டா கத்திகளுடன் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பேருந்து படிக்கட்டிகளில் தொங்கியப்படி பட்டா கத்திகளை தரையில் உரசினர். மேலும் மாநிலக் கல்லூரிக்கு ஜே என்று முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

சென்னையில் கல்லூரி மாணவர்கள் அத்துமீறி ரகளையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையி்ல் பேருந்தில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சென்னை மாநகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல மாநிலக்கல்லூரி நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகின்றது. கத்திகளுடன் பயணம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!