நெல்லை முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…. நெகிழவைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்…

 
Published : Aug 17, 2017, 07:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
நெல்லை முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…. நெகிழவைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்…

சுருக்கம்

kerala cm binarayee vijayan announces 10 lakhs financial assistance to Murugan family

கேரள மருத்துவமனைகளின் அலட்சியப் போக்கால் அலைக் கழிக்கப்பட்டு உயிரிழந்த நெல்லையைச் சேர்ந்த முருகனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துரைகுடியிருப்பை சேர்ந்த முருகன் என்ற இளைஞர் கேரளாவின் கோட்டயத்தில் தங்கியிருந்து பால் வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த 6-ந் தேதி கொல்லம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது முருகன் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் எந்த மருத்துவமனையும் முருகனுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் இத்தகைய அலட்சியத்தால் சுமார் 7 மணி நேரம் போராடி முருகன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன், மாநில சட்டசபையில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

இது போன்ற சம்பவம் மேலும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

முருகனின் மரணத்தால் அவரது குடும்பம் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளது. குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமான முருகனை இழந்து வாடும் அவரது குடும்பம் தற்போது ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. 2-ம் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி. படித்து வரும் அவரது 2 மகன்களின் கல்விக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு முருகனின் மனைவி முருகம்மாள் நேற்று திருவனந்தபுரத்தில் முதலமைச்சர்  பினராயி விஜயனை சந்தித்தார்.

அப்போது தங்கள் குடும்பத்துக்கு உதவி கேட்டு மனு ஒன்றையும் அவரிடம் வழங்கினார். இதைக்கேட்டுக்கொண்ட பினராயி விஜயன், முருகனின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

இதையடுத்து முதலமைச்சர்  பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை  கூட்டத்தில் மரணமடைந்த முருகனின்  குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகை முருகனின் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு வழங்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!