ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கிறதா திமுக அரசு..? கோதாவில் குதிக்கும் பத்திரிக்கையாளர் சங்கங்கள்

By Ajmal KhanFirst Published May 23, 2022, 10:52 AM IST
Highlights

கட்டுமான நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில், ஜூனியர் விகடன்,சவுக்கு சங்கர், மாரிதாஸ், மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

திமுக மேலிடம் பெயரை கூறி மிரட்டல்

ஜி ஸ்கொயர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம்  திமுகவின் மேலிடத்தில் தொடர்பு வைத்துக்கொண்டு, மற்ற நிறுவனங்களை மிரட்டுவதாகவும், திமுக முக்கிய பிரமுகர்கள் பெயரை பயன்படுத்து சிஎம்டிஏவில் கட்டிடம் மற்றும் நிலங்களுக்கு அனுமதி பெறுவதாக ஜூனியர் விகடன், சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையில் புகார் ஒன்றை கொடுத்துள்ளது. இந்த புகாரில் கவின் என்பவர்  ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும்  நிர்வாக இயக்குநர் ராமஜெயம் என்கிற பாலா என்பவரை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் ஜூனியர் விகடன் மற்றும் யூடியூப் போன்ற டிஜிட்டல் மீடியாக்களில் தவறான செய்திகளை வெளியிட செய்வேன் என கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.


காவல்நிலையத்தில் புகார்

மேலும் கடந்த 9 ஆம் தேதி  அடையாளம் காட்டக்கூடிய ஒருவர் ஜி ஸ்கொயர்  அலுவலகத்திற்கு நேரில் வந்து மிரட்டியதாகவும் அந்த  புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் பெயரையும் மற்றும் சவுக்கு சங்கர் ,மாரிதாஸ் ஆகியோர் பெயர்களும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் காவல்துறையில் புகார் கொடுத்துள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம் தங்களைப் பற்றிய செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் மீது ஏற்கெனவே வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ்  அனுப்பியது.அதற்கு விகடன் நிறுவனமும் பதிலளித்துள்ளது. இந்தநிலையில் ஜூனியர் விகடன் மற்றும் பத்திரிகைகயாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் இரவு 9 மணிக்கு புகார் பெறப்பட்டு, இரவு 2 மணிக்கு உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரவே கைது நடந்துள்ளது.  மேலும், புகாரில், *3வது குற்றவாளியாக “ஜூனியர் விகடனோடு சம்பந்தப்பட்டவர்கள்” என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுனர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல் துறைக்கு உரிமை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகத்திற்கு மிரட்டல்

ஜூனியர் விகடன் பெயரை கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டினால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தை அணுகி தெளிவு பெற்றிருக்கலாம்.  அது உண்மையா என்றும் விசாரித்திருக்கலாம்.  ஆனால், காவல் துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளிப்பதும், இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், , ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊடகங்களுடன் நல்லுறவு பேணும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்காது என்று நம்புவதாக தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் மன்றம், எனவே இந்த விஷயத்தில் ஊடக சுதந்திரத்தை மதிக்கும் முதலமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இது போல பல்வேறு பத்திரிக்கையாளர் சங்கங்கள் காவல்துறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
 

click me!