
திருவாரூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 45 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைப்பூண்டி அருகே எடையூரில் அரசு பள்ளி ஆசிரியையாக இருப்பவர் இந்திரா. இவர் தினமும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வருவார்.
இந்நிலையில், வழக்கம்போல் இன்றும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 45 சரவன் நகையும் ரூ. 6 ஆயிரம் பணமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து இந்திரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலிலேயே மர்ம நபர்கள் இவ்வாறு கைவரிசை காட்டியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.