
அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் ... காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் இருந்து காளை நீக்கம்....
ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கான சட்டப்பிரிவு இந்த வரைவில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜல்லிகட்டு நிகழ்ச்சியை நடத்திட தமிழக அரசு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் பிரதமர் ஏற்கெனவே உறுதியளித்திருந்த நிலையில், முதலமைச்சர் டெல்லியில் தங்கி அவசர சட்ட வரைவை தயார் செய்து உள்துறை அமைச்சகத்திடம் வழங்க நடவடிக்கை எடுத்தார். இதனைதொடர்ந்து தமிழக அரசின் அவசர சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்கியின் ஆலோசனையைப் பெற்று, ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கான தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு, மத்திய அரசின் சட்டம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள்ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் அவசர சட்ட வரைவு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சட்ட அமைச்சகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கான சட்டப்பிரிவு இந்த வரைவில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இன்று மாலையே, அவசர சட்டம் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.