
சிவகங்கை
அரசின் நலத் திட்டங்களை மக்கள் முழுமையாக தெரிந்து கொண்டால்தான் இடைத்தரகரின்றி அதனை பெற முடியும். மேலும், மற்றவருக்கும் அதனை தெரியப்படுத்த வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் டி.காளாப்பூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைப்பெற்றது.
இதில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வழங்கினார்.
அப்போது அவர் பேசியது:
“பொது விநியோகத் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெற்று பயன்பெறும் நோக்கில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கையடக்க குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பட்டா மாறுதல் உள்ளிட்ட தேவைகளுக்கு கிராமங்களில் உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து மாற்றிக் கொள்ளலாம்.
வீடுகள் தோறும் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12 ஆயிரம் அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும்.
அரசின் நலத் திட்டங்களை இடைத்தரகரின்றி பெற வேண்டுமெனில், அத்திட்டம் குறித்து மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு தெரிந்தவற்றை கிராமப்புறங்களில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் நிச்சயம் அரசின் திட்டம் அனைவருக்கும் கிடைக்கும்” என்று பேசினார்.
இம்முகாமில், வருவாய்த் துறை மூலம் 46 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இலவச வீட்டுமனைப் பட்டா, சிறு, குறு விவசாயி சான்றிதழ், ஒன்பது பயனாளிகளுக்கு இறப்பு நிவாரணத் தொகையாக ரூ.1 இலட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலை, விவசாயத் துறையின் சார்பில் நுண்ணுயிர் பாசனத் திட்டத்தின் கீழ் மழைத் தூவான்கள் போன்றவை வழங்கப்பட்டன.
இந்த முகாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.