
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவித்ததின் எதிரொலியாக பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதிகளில் தொழிலாளர்களுக்கு கூலித் தொகை வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.
பெருந்துறை சிப்காட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. சென்னிமலை பகுதியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, வாரந்தோறும் வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் கூலி வழங்கப்படுகிறது.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், வங்கியில் இருந்து அதிக அளவிலான பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு கூலி வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, சென்னிமலை பகுதி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர், “சென்னிமலை பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு மட்டும் வாரம் ரூ.1 கோடிக்கு மேல் கூலியாக வழங்கப்படுகிறது. இதை நாங்கள் வங்கியில் இருந்து பெற்று கொடுப்போம்.
தற்போது வங்கியில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு, 4,000 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்களோ, அதுபோலத்தான் கூட்டுறவு சங்கத்துக்கும் தருகின்றனர். எனவே, நிலைமை சரியான பிறகு, ஒரு வாரம் கழித்து, கூலி வழங்குவதாக நெசவாளர்களிடம் கூறியுள்ளோம்” என்றார்.
இதேபோல், பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அடுத்த வாரம் ஊதியம் வழங்கப்படும் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஒரு சில நிறுவனங்கள், முன்பணமாக குறிப்பிட்ட தொகையை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
ஒருவாரம் கழித்துப் பெற்றுக் கொள்வதில் தொழிலாளர்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால், இந்த சம்பளத்தை தான் ஒருவாரம் அவர்களது குடும்பம் நம்பியிருக்கிறது. அன்றாடத் தேவையை தாண்டியும், அடிப்படைத் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் பாதாளத்தில் தள்ளிவிட்டது இந்த அரசு என்று பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.