
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்னாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு 2015-2016 ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பை விருது ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் மோதிலால் வோரா, டெல்லியில் வெளியிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாடுபடுபவர்களுக்காக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கர்நாடக இகைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டி.எம். கிருஷ்ணா, ஆரம்ப கால இசைப்பயிற்சியை பி. சீதாராம சர்மாவிடமும், பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதனிடமும் பெற்றார். மேலும், பிரபல இசை மேதை செம்மங்குடி சீனிவாச அய்யரிடம் 7 ஆண்டு காலம் இசைப்பயிற்சி பெற்றுள்ளார்.
டி.எம். கிருஷ்ணா, தீவிரமான கர்னாடக இசைப்பாடகராக மட்டுமல்லாது, இந்த இசையை கற்றுத்தரும் ஆசிரியராகவும் திகழ்கிறார். உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடுகிறார். இசை சொற்பொழிவுகளும் ஆற்றி வருகிறார்.
கர்நாடக இசை மேல்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல அடித்தட்டு மக்களுக்கும் சொந்தமானது என தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் டி.எம்.கிருஷ்ணா, இதற்காக சேரி பகுதிகளில் வாழும் மக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கர்நாடக இசையை கற்றுத் தருகிறார்.
இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது, பாராட்டு சான்றிதழும், ரூ. 10 லட்சம் ரொக்கப்பரிசும் கொண்டதாகும்.
டி.எம். கிருஷ்ணா, ஏற்கனவே ரமோன் மகசேசே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.