தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பு நிலை: 5 மாவட்டங்களில் பற்றாக்குறை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

By Selvanayagam PFirst Published Sep 27, 2019, 8:56 AM IST
Highlights

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பாகவே இருக்கிறது, என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஜூன் 1-ம் தேதிமுதல் செப்டம்பர் 26-ம் தேதி(இன்று) வரை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பெய்த மழையளவு குறித்தும், செப்டம்பர் மழை குறித்தும் ஃபேஸ்புக்கில் தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளா். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
 
“ செப்டம்பர் மாத மழை நாளையுடன் ஏறக்குறைய முடிவுக்கு வருகிறது. கேடிசி எனச் சொல்லப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை அதேபோல திருச்சி, டெல்டா மாவட்டங்கள், திருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.


தென் மேற்கு பருவமழை விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி உள்பகுதியில் வறண்டகாற்று வீசம் போது காற்றின் தாக்கம் காரணமாக அடுத்துவரும் நாட்களில் தென் மாவட்டங்களில் வேண்டுமானால் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைப் பொறுத்தவரை ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் சேலான மழை பெய்யக்கூடும், பரவலமான மழை இருக்காது. இனிமேல் வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு குறைவு. செப்டம்பர் மாதத்தில் நல்ல மழை கிடைத்திருக்கிறது.
 
தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அணைகள் பெரும்பாலும் இந்த மழையால் நிரம்பிவிட்டன. சென்னையில் வியப்பளிக்கும் வகையில் ஏரியில் 5 சதவீதம் தண்ணீர் இருப்பு தென் மேற்கு பருவமழையில் உயர்ந்திருக்கிறது.
 
1996-ம் ஆண்டில் தென் மேற்கு பருவமழையின்போது சென்னையில் உள்ள ஏரிகள் நிரம்பின. பூமியில் நீர்பிடிப்பு இருந்துவிட்டால், அடுத்துவரும் மழையில் ஏரியில் நீர் இருந்துவிடும். தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் கூட பற்றாக்குறையில் இருந்து மீண்டுவிட்டன.
 
ஆனால், இன்னும் 4நாட்கள் மட்டுேம இருக்கும் நிலையில் காஞ்சிபுரம், மதுரை, கிருஷ்ணகிரி, நாமக்கல்,திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாகவே இருக்கிறது. அடுத்த 4 நாட்களில் மழை பெய்யும் என நம்புவோம்.
 
தென் மேற்கு பருவமழை இந்தமுறை தமிழகத்தில் இயல்பைக் காட்டிலும் 17 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது, இருந்தாலும் இயல்பான மழைதான். வழக்கமாக 323.4  ம.மீ மழை பெய்ய வேண்டும், ஆனால், 379மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. இது ஜூன் 1-ம் தேதிமுதல் செப்டம்பர் 26-ம் தேதிவரையாகும்.
 
தமிழகத்தில் இயல்புக்கும் மிகமிக அதிகமாக திருவண்ணாமலை, நெல்லை, அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதில் நெல்லையில் 119 மிமீ மழை பதிவாக வேண்டிய நிலையில், 224 மிமீ மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலையில் 426 மிமீ மழை பதிவாக வேண்டிய நேரத்தில், 680 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அரியலூரில் 356 மி.மீ மழை இருந்தால் இயல்பானது என்ற நிலையில்581மி.மீ மழை பதிவாகியுள்ளது.
 
தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இயல்புக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. அதில் தேனி, புதுச்சேரி(மாநிலம்), சிவகங்கை, சென்னை, திருவாரூர், நாகப்பட்டிணம், விருதுநகர், திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், கன்னியாகுமரி, திருப்பூர்,சேலம், தஞ்சை ஆகிய இடங்களில் இயல்பைக் காட்டிலும் அதிக மழை பெய்துள்ளது.


 
11 மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாகியுள்ளது. அவை, தர்மபுரி, விழுப்புரம்,கடலூர், கோவை, காரைக்கால், தூத்துக்குடி, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, ராமநாதபுரம் ஆகியவற்றில் இயல்பான மழை பெய்துள்ளது
 
காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழையைக்காட்டிலும் குறைவாகவே பெய்துள்ளது.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

click me!