
தஞ்சாவூர்
கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீரை பெற்று தராவிட்டால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று தஞ்சாவூரில் ஐயாக்கண்ணு வருத்தத்துடன் தெரிவித்தார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் ஐயாக்கண்ணு நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
"டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளது. காலதாமதமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் முழு அளவில் சம்பா சாகுபடி நடைபெறவில்லை.
உதாரணத்திற்கு 10 ஏக்கர் இருக்கிறது என்றால் 5 ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. அந்த பயிரும் தற்போது தண்ணீர் இன்றி கருகி வருகிறது.
எங்களை வாழ வைக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் பரிதாபமாக பார்க்கிறது. பதவியை தக்க வைப்பதற்காக பல முறை டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் பிரச்சனைக்காக கடிதம் எழுதுகிறார்.
முதலமைச்சர் உடனே டெல்லிக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்து பேசி தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி மத்திய, மாநில அரசுகள் தண்ணீரை பெற்று தராவிட்டால் கடந்த ஆண்டை போல் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். அந்த சூழலை பிரதமரும், முதலமைச்சரும் ஏற்படுத்தக் கூடாது" என்று அவர் கூறினார்.