
அந்தியூரில் சூறாவளிக் காற்றுடன் பெய்த பெருமழைக்கு 50 மரங்கள் சாய்ந்து பலியாயின. மேற்கூரை பறந்து இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழையும், சூறாவளிக் காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது.
அந்தியூரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் இரவு 8 மணியளவில் சூறாவளிக் காற்றுடன் பெருத்த மழை பெய்தது. இந்த மழை இரவு 10 மணி வரை நீடித்தது.
இதேபோன்று அந்தியூர் அருகே ஆப்பக்கூடல், செட்டிக்குட்டை, நல்லாமூப்பனூர், வேம்பத்தி, சிந்தகௌவுண்டன் பாளையம், பருவாச்சி, செம்புளிச்சாம் பாளையம் ஆகிய பகுதிகளிலும் சூறாவளிக் காற்றுடன் பேய் மழை பெய்தது.
இந்தச் சூறாவளிக் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பருவாச்சி – அந்தியூர் சாலையில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட புளியமரம், ஆலமரம், புங்கன் மரம் வேரோடும், முறிந்தும் நடுசாலையில் விழுந்தன. இதனால் அந்த வழியாக பேருந்து, மகிழுந்து, சரக்குந்தில் சென்றவர்கள் சிரமப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களே வாகனங்களில் இருந்து இறங்கி மரங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், சூறாவளிக் காற்றால் செட்டிகுட்டையில் உள்ள முத்துசாமி என்பவரின் வீட்டின் ஓடுகள் தூக்கி வீசப்பட்டன. இதில் வீட்டுக்குள் இருந்த அவருடைய மனைவி துளசியம்மாள் (55) படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதே பகுதியில் உள்ள இலட்சுமணன் என்பவரின் சிமெண்ட் மேற்கூரை சூறாவளிக் காற்றில் தூக்கி வீசப்பட்டது.
இந்த மழையால் அந்தியூர் பகுதியில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது.