
திருவாரூர்
திருவாரூரில் நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து, ரூ.400 சம்பளம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 143 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி ஆற்றின் கடை மடை பகுதிகளில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியும் ஒன்று. கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும், பருவமழை போதிய அளவு பெய்யாததாலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. சம்பா பயிர்கள் கருகியதால் விவசாயிகள் இந்த ஆண்டு கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
வறட்சி காரணமாக விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை நகர் புறத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும். 2015-2016-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், 2014-15-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகையை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து, ரூ.400 சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் அருகே உள்ள மாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் இடும்பையன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாமியப்பன், மாதவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வடுகநாதன், பவுன்ராஜ், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குளம் கடைவீதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அருண், ஆய்வாளர் (பொறுப்பு) ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.
சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பேரளம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு நன்னிலம் ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் காளிமுத்து, ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலைமறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 59 பேரை பேரளம் போலீசார் கைது செய்தனர். சாலை மறியல் காரணமாக திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொரடாச்சேரி வெட்டாற்று பாலத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் 25 பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்தனர்.
இதேபோல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 143 பெண்கள் உள்பட 450 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.