கட்சிக்காக முழு மூச்சாய் உழைக்கும் எங்களை பார்த்து அப்படி சொல்லலாமா? காங்கிரசார் நூதன போராட்டம்...

First Published Jun 29, 2018, 8:51 AM IST
Highlights
how could you say like that Congress officials different style struggle ...


கரூர் 

கட்சிக்காக முழு மூச்சாய் உழைக்கும் எங்களை பார்த்து பகுதி நேரமாக கட்சி பணி ஆற்றுகிறோம் என்று கூறலாமா? என்று வினவிய நிர்வாகிகள் கரூர் காங்கிரசு கட்சி அலுவலகத்தில் பெட்டி, படுக்கையுடன் குடியேறி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 25-ஆம் தேதி கரூர் நகர காங்கிரசு கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் கரூரில் நடைப்பெற்றது. 

இதில் பங்கேற்ற மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, "காங்கிரசு கட்சியில் தற்போது பணியாற்ற பகுதிநேர அரசியல்வாதிகள் தேவையில்லை. முழுநேரமும் கட்சி பணியில் ஈடுபாடுடையவர்கள்தான் தேவை" என்று பேசினார். 

இந்தக் கருத்திற்கு கரூர் மாவட்ட காங்கிரசு நிர்வாகிகள் சில பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காங்கிரசு கட்சியின் கரூர் நகரப் பொருளாளர் தாந்தோன்றி குமார், நகர செயற்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், செந்தில்குமார், நகர செயலாளர் ரமேஷ், வட்டார துணை தலைவர் யுனிக்பாலசந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று ஒன்று கூடினர். 

கரூர் -  கோவை சாலையில் உள்ள வையாபுரிநகரில் கூடிய இவர்களுக்கு அக்கட்சியின் கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேகாபாலசந்தர் தலைமை தாங்கினார்.

அப்போது அவர்கள், "தலையில் குல்லா அணிந்து, வெள்ளை சட்டை மற்றும் கழுத்தில் துண்டு போட்டுக்கொண்டு நாங்கள் முழுநேரமும் கட்சி அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்ய தயாராக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க அங்கு குடியேறும் போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்று முடிவெடுத்தனர்.

அதன்பின்னர் அவர்கள் பெட்டி, படுக்கை, தலையணை உள்ளிட்டவற்றுடன் கரூர் வையாபுரிநகர் 2-வது கிராசில் உள்ள காங்கிரசு அலுவலகத்தை நோக்கி "முழுநேர பணிக்கு வந்துவிட்டோம்" என்று முழக்கமிட்டபடி நடந்து சென்றனர். அப்போது அவர்களை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடிக்கப்பட்டது. 

இந்த நிலையில், கரூர் மாவட்ட காங்கிரசு தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் அலுவலகத்திற்குள் அமர்ந்திருந்ததால் காங்கிரசு கட்சி அலவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

குடியேறும் போராட்டம் நடத்த வந்த காங்கிரசு நிர்வாகிகள், கட்சியின் அலுவலக அறை முன்பாக பாயை விரித்து காங்கிரசு கொடியை கையில் பிடித்துகொண்டு உட்கார்ந்தனர். 

அப்போது, "காங்கிரசு கட்சியில் அனைவருமே முழு மூச்சுடன்தான் உழைத்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் கரூர் காங்கிரசு கட்சிப் பணி குறித்து தெரிவிக்க அதிகாரம் கொடுத்தவர் யார்? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதுகுறித்து மாவட்ட பொதுச் செயலாளர் சுரேகா பாலசந்தர்,, "ராகுல்காந்தி பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது என தீவிர பணியில் தான் இருக்கிறோம். 

அப்படியிருக்கையில் குறை கூறுவது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான். அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக மற்றும் அகில இந்திய காங்கிரசு தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

சிலர் எங்களை பொறுப்பில் இல்லை எனவும் கூறுகின்றனர். கரூரில் இருவர் நகர தலைவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தன்னிச்சையாக ஒருவரை மட்டுமே நகர தலைவர் என்று கூறுகின்றனர். 

தேர்தல் பொறுப்பாளராக சஞ்சய்தத் என்பவர் வந்திருந்த போது, ஒரு நகரத்திற்கு சௌந்தர்ராஜையும், மற்றொரு நகரத்திற்கு ஸ்டீபன்பாபுவையும் நியமிக்க சொல்லி கோரிக்கை கடிதம் கொடுத்தார். 

சமீபத்தில் கட்சிக்கு சம்பந்தமில்லாத சிலரை அழைத்து வந்திருக்கின்றனர். அமுதா சுப்ரமணியமும், கணேசனும் தொழில்அதிபர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கரூர் காங்கிரசு கட்சி அலுவலகத்திற்குள் நிர்வாகிகள் சிலர் குடியேறும் போராட்டம் நடத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

click me!