துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்டவிடாமல் தடுத்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் - என்ன கொடுமைடா இது!..

First Published Mar 6, 2018, 7:41 AM IST
Highlights
housing residents blocked building house for cleaning staff


கரூர்

கரூரில், துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் வீடு கட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், எஸ்.வெள்ளாளப்பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 120-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் கடந்த 15 வருடங்களாக வசித்து வருகின்றனர். 

இந்தக் குடியிருப்புகளுக்கு முன்பாக மைதானம் போன்ற இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 632 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூ.55 கோடியே 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, வீடு கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கின.

இந்த நிலையில், நேற்று அந்த மைதானத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தபோது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தை சிறைப் பிடித்தனர். 

மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் தங்களுக்கு ஏற்கனவே விளையாட்டு மைதானம் என்றும், இந்த இடத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வர உள்ளது என்றும் கூறி இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பசுபதிபாளையம் காவலாளர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் படியும் அதன்பிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனையடுத்து மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்திற்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனுக்கள் அளிப்பதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். 

துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட விடாமல் தடுத்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!