
2015 ஆம் வருட பலத்த மழை எச்சரிக்கையைப் போலவே, இந்த வருடமும் பலத்த மழை பெய்யும் என்று பிபிசி வானிலை செய்தி பிரிவு பகீர் செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில், தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வானம் சற்றே பளிச்சென்றிருந்த நிலையில், திடீரென மீண்டும் மேகக் கூட்டங்கள் சேர்ந்து வானிலை மாறிய நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் என்று கூறினார்.
தமிழகத்தில் பெருமழை பெய்யும் என்றும் இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், பிபிசி வானிலை செய்தி பிரிவு டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதில் பதிவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று கடலோர ஆந்திராவிலும் மழை பெய்யும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது சுமார் 50 செ.மீ. அளவு மழை பெய்யலாம் என்றும் இதனால் மிகப் பெரிய வெள்ளத்துக்கும், நிலச்சரிவுக்கும் வாய்ப்புள்ளதாவும் பிபிசி அந்த டுவிட்டரில் கூறியுள்ளது.
தற்போது பெய்து வரும் மழைக்கே சென்னை தத்தளித்து வரும் நிலையில், பிபிசி வானிலை செய்தி பிரிவின் அறிக்கை, சென்னை மக்களுக்கு மேலும் பீதியை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது
கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்யும் என்று பிபிசி முன் கூட்டியே தெரிவித்திருந்தது. அதைப் போலவே பெருமழை பெய்து, நகரமே வெள்ளத்தில் மிதந்தது. இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டது.
தமிழகத்தில் இந்த வருடமும் 50 செ.மீ. மழை பெய்யும் என்று பிபிசி வானிலை செய்தி பிரிவு தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த சில நாட்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாய கட்ட அளவுக்கு மழையை கொண்டு வரும் என்று மற்றொரு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.