
சென்னையை கடந்த டிசம்பர் மாதம் மிரட்டி சென்ற மிக்ஜாம் புயலின் சுவடுகளே இன்னும் மாறாத நிலையில், இன்று இரவு முதல் நாளை மாலை வரை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று ஜனவரி 7ஆம் தேதி இரவு முதல், நாளை ஜனவரி 8ஆம் தேதி மாலை வரை மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட தனது முகநூல் பதிவு ஒன்றில், பொதுவாக வடகிழக்கில் இருந்து பெய்கின்ற பருவ மழையானது வருட இறுதியில், அதாவது அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் மட்டும்தான் பெய்யும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே வடகிழக்கில் இருந்து வருகின்ற பருவமழை, ஜனவரி வரையிலும் தொடர்கிறது.
ரூ.5.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்! முதல் நாளிலேயே இலக்கை எட்டிய சென்னை முதலீட்டாளர் மாநாடு!
இந்த சூழ்நிலையில் இவ்வாண்டும் வடகிழக்கு பருவமழை இந்த ஜனவரி வரை தொடரும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் கனமான மழை வரை பெய்து வருகிறது. அதேபோல விருதுநகர் மாவட்டம் மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
டெல்டா மாவட்டங்களிலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி போன்ற தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்திலும் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது புயல் ஆகிய இரண்டும் இல்லாத சமயங்களில் இது போன்ற மழை பெய்வது மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பெய்தது போல வடகிழக்கு பருவமழை இந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடர்கிறது. மேலும் வெதர்மேன் அறிவித்த தகவலின்படி மேற்கூறிய நான்கு மாவட்டங்களில் 75 மில்லி மீட்டர் முதல் 150 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும். அதே வேலையில் 150 முதல் 250 மில்லி மீட்டர் வரை அதீத மழை பெய்யும் வாய்ப்புகளும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனால் சென்னை உள்ளிட்ட மழை அதிகமாக உள்ள நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்படுமா என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து எந்த விதமான தகவலையும் இதுவரை பள்ளி கல்வித்துறை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே மக்கள் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்ல முடிவாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.