
நாளை காலை முதல் மிக கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையோரத்தில் ராமேஸ்வரம் முதல் சென்னை வரையிலான பகுதிகளில் மிக கனத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவின் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வடமேற்காக நகர்ந்து வருகிறது.
இதன் காரணத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பிட்ட இடைவெளிகளில் கன மழை பெய்யக் கூடும்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் , இலங்கைக்கு அருகே நேற்று நிலை கொண்ட வளிமண்டல சுழற்சி அதே இடத்தில் நிலவுகிறது. இதனால் வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலும் உள் மாவட்டத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் . திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ,ராமநாதபுரம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கன மழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் ஆணைக்காரன் சத்திரம் பகுதியில் 9 செ.மீ., சீர்காழியில் 6 செ.மீ., நாகை, காரைக்கால், சென்னை விமான நிலைய பகுதியில் 5 செ.மீ. மழை பெய்துள்ளதாக பாலசந்திரன் கூறினார்.