நீங்கள் முஸ்லீம் தானே? பிரஸ்மீட்டில் செய்தியாளரிடம் சீறிய ஜார்ஜ்!

By vinoth kumarFirst Published Sep 8, 2018, 6:55 AM IST
Highlights

செய்தியாளர் சந்திப்பின் போது டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சபீரை பார்த்து நீங்கள் முஸ்லீம் தானே என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சீறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பின் போது டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சபீரை பார்த்து நீங்கள் முஸ்லீம் தானே என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சீறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ சோதனை நடத்திச் சென்றதை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ். அப்போது டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சபீர் குறுக்கிட்டு, கடந்த 2015ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை என்று கூறி குட்கா குடோன் உரிமையாளரிடம் 15 லட்சம் ரூபாய் பெற்றதாக உங்கள் மீது வருமான வரித்துறை குற்றஞ்சாட்டி கடிதம் எழுதியது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். 

இந்த கேள்விக்கு பதில் அளித்த ஜார்ஜ் நான் கிறிஸ்தவன் என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பணம் வாங்கியதாக நீங்கள் கூறுகிறீர்களா? என்று கேட்டதுடன் திடீரென நீங்கள் டைம்ஸ் நவ் செய்தியாளரா? என்று கேட்டார். அதற்கு சபீர் ஆம் என்றதும், நீங்கள் முஸ்லீம் தானே என்று ஜார்ஜ் கேட்டுவிட்டார். இதனால் கோபம் அடைந்த சபீர், நான் எந்த மதமாக இருந்தால் என்ன? ஒரு பத்திரிகையாளரிடம் இப்படித்தான் கேள்வி கேட்பீர்களா என்று ஜார்ஜிடம் கேட்டுவிட்டார். இதனால் நிலைகுலைந்த ஜார்ஜ், இல்லை நீங்கள் முஸ்லீமாக இருக்கும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்க ஒரு பத்திரிகையாளர் மாமூல் வாங்கினார் என்றால் அது உங்களை குறிக்குமா என்று சமாளித்தார்.

இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு ஏப்ரலில் வருமான வரித்துறை சோதனை குட்கா குடோனில் நடைபெற்றது. நீங்கள் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையராக மீண்டும் பதவி ஏற்கிறீர்கள், ஆனால் டிசம்பர் மாதம் தான் குட்கா முறைகேட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக நீங்கள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள்? செப்டம்பருக்கும் – டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சபீர் கேள்வி எழுப்பினார்.

இதனால் சற்று நிதானம் இழந்த ஜார்ஜ், நீங்கள் ஒருவர் மட்டுமே செய்தியாளர் அல்ல, இங்கு நிறைய செய்தியாளர்கள் இருக்கிறார்கள், உங்கள் ஒருவரின் கேள்விக்கு மட்டுமே என்னால் பதில் அளிக்க முடியாது என்று சீறினார். உடனே வேறு சில செய்தியாளர்களும் சபீருடன் இணைந்து அதே கேள்வியை கேட்டனர். அதற்கு தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், நடவடிக்கைக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் என்று கூறிவிட்டு எழுந்தார். அதன் பிறகும் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபடியே இருந்த காரணத்தினல் அவரது உதவியாளர் வலுக்கட்டாயமாக ஜார்ஜை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

click me!