மாடு மேய்த்த சிறுவன் கேட்ட ‘அந்த’ கேள்வி.! மதிய உணவு முதல் 16,000 பள்ளிகள் வரை - காமராஜரின் கல்வி பணிகள் !

By Raghupati RFirst Published Sep 30, 2022, 10:38 PM IST
Highlights

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 16,000 பள்ளிக்கூடங்களை திறந்து மக்களுக்கு கல்வி அறிவை கொடுத்த கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் அக்டோபர் 2 ஆகும்.

கல்விக்கண் திறந்த காமராஜர் :

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களில் குறிப்பிடத்தக்கவர் பெருந்தலைவர் காமராஜர். சுமார் 9 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் பொற்காலம் என்று இன்றளவும் கருதப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்தவொரு வார்த்தையே போதும், கல்விக்கண் திறந்த காமராஜர் தான் அந்த வார்த்தை.

பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டம் முதல் சுமார் 16,000 பள்ளிகள் திறந்தது என இவரது ஆட்சியில் பள்ளி கல்வித்துறையின் பொற்காலமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும். இப்போது திமுக,அதிமுக என தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பள்ளிக்கல்வித்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு விதை போட்டது காமராஜர் தான்.  தன்னுடைய உழைப்பால் படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

மக்களின் வெறுப்பை சந்தித்த ராஜாஜி :

சென்னை மாகாணத்தில் 1951 ஆம் ஆண்டு 80% பேர் கைநாட்டுகள்தான். 1946 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் சேர்ந்த 12 லட்சத்து 22 ஆயிரத்து 775 குழந்தைகள் 5-ம் வகுப்பு வருவதற்குள் 100-க்கு 63 பேர் பாதியிலே நின்றுவிட்டார்கள். இந்தச் சூழலில், சென்னை மாகாணத்தின் கல்வித் துறை 1950-ல் பத்தாண்டுத் திட்டமொன்றை உருவாக்கியது. அதில், ஆண்டுக்கு ஒரு கோடி செலவழித்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐந்து லட்சம் புதிய மாணவர் களைப் பள்ளியில் சேர்க்கலாம் என்றது.

ஆனால் நடைமுறையில் 1950-51-ல் கல்விக்காக சென்னை மாகாணத்தில் 5 லட்சம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. அப்போதைய தமிழகத்தில் எல்லாக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கத் தேவையான அளவு பள்ளிகளும் கிடையாது, ஆசிரியர்களும் கிடையாது. அப்போது மீண்டும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி மீண்டும் வந்தார். 1953 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்பக் கல்வித் திட்டத்தை அவர் அறிவித்தார்.

குலக்கல்வி திட்டம் :

அப்போதைய பள்ளிகள் ஐந்து மணி நேரம் இயங்கின. அதை மாற்றி, மூன்று மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும். மூன்று மணி நேரம் தங்களின் குடும்பத் தொழிலை மாணவர்கள் கற்க வேண்டும் என்று ராஜாஜி மாற்றினார்.  மாணவிகள் வீட்டுவேலைகளைக் கற்க வேண்டும் என்று கூறினார். குடும்பத் தொழில் செய்யும் பெற்றோர் இல்லாத மாணவர்கள் வேறொரு தொழில் செய்பவரிடம் வேலையைக் கற்கலாம்.

இது தவிர, மாணவர்கள் தமது ஊர்களில் துப்புரவுப் பணி, சாலைகள் அமைத்தல், கட்டிடம் கட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுவார்கள். இரண்டு பணி நேரங்களில் தினமும் பள்ளிகள் இயங்கும் என்றார் ராஜாஜி. தானாகவே எரிந்துகொண்டிருந்த தமிழகத்தின் மேல் இந்தக் கல்வித் திட்டம் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டது. இதை, குலக்கல்வித் திட்டம் என்றார் பெரியார். மக்களின் எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்து, பல கட்சிகளை ஒன்றுபடுத்தியது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காமராஜர் தலைமையில் எதிர்ப்பு வெளிப்பட்டது. ராஜாஜி வெளியேறினார். காமராஜர் 1954-ல் முதல்வர் ஆனார்.

மதிய உணவு திட்டம் :

இலவசக் கட்டாயக் கல்வியைத் தமிழகத்தில் உருவாக்கி வலுப்படுத்தினார். 1925-ல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக சிங்காரவேலர் இருந்தபோது, மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்க வைத்தார். அந்த மதிய உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் காமராஜர் அறிமுகப்படுத்தினார். இது உலக அளவில் இன்னமும் பேசப்படுகிற புதிய முயற்சி.

ஒருநாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், பள்ளிக்கு செல்லவில்லையா  என்று கேட்டதற்கு, சாப்பாடு தருவீங்களா என்ற பையனின் எதிர்கேள்வியை மனதில் கொண்டு, போட்டார் ஒரு சட்டம். அது தான் இலவச மதிய உணவுத் திட்டம் என்று ஒரு நிகழ்ச்சியில் காமராஜர் இந்த திட்டத்தின் தொடக்கம் எங்கு தோன்றியது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழைகளின் வயிற்று பசியை போக்கியவர் :

இதன்மூலம் பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதும், இடையிலேயே நின்றுபோகாமல் தொடர்ந்து வருவதும் அதிகரித்தது. லட்சக்கணக்கான குடும்பங்களில் கல்வி முதன்முறையாக நுழைந்தது. தமிழகத்தைப் பின்பற்றித்தான் பல மாநிலங்கள் மதிய உணவுத் திட்டத்தில் இறங்கின. இந்த திட்டம் தற்போதைய திமுக ஆட்சியில் காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை வைத்தே இதன் வெற்றியை பார்க்கலாம்.

ஒவ்வொரு ஊரிலும் பள்ளிகள் :

தான் படிக்கா விட்டாலும், இந்த தேசம் படிக்க வேண்டும் என்று நினைத்தவர் கர்ம வீரர் காமராஜர். எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு கல்வி ஒரு சொத்து. கல்வி என்ற சொத்தை பெற்று விட்டாலே வறுமை தானாகவே ஒழிந்து விடும் என்பதே காமராஜரின் எண்ணம். வெறும் எண்ணத்தோடு மட்டுமல்லாமல், அதனை செயல்படுத்தியும் காட்டினார் காமராஜர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி என்பது அவரது முக்கியக் கொள்கையாக இருந்தது.

அனைவருக்கும் ஒரே சீருடைகள் :

காமராஜர் 1957-1962 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 13,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார். மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சம் ஆக உயர்ந்தது. பதினோராம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி என்பதையும் உறுதி செய்தார் காமராஜர். பொருளாதார ஏற்றத்தாழ்வு உடைகளில் தெரியக்கூடாது என்பதற்காக சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்தார் என்றுதான் கூற வேண்டும்.

தொழிற்கல்வி முதல் மெட்ராஸ் ஐஐடி வரை :

தொழிற்கல்வி காமராஜர் ஆட்சியில் தொடங்கப்பட்டது. மேலும் மெட்ராஸ் ஐஐடி தொடங்கப்பட்டது காமராஜர் ஆட்சியில்தான். பள்ளிக்கூடத்தை கட்டினாலும் பிள்ளைகள் சரியாக சேரவில்லை. ஒரு முறை ஒரு தாயிடம் ‘பிள்ளையை ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை’ என்று கேட்டார் காமராஜர்.  அதற்கு அந்த தாய் "என் பிள்ளை படித்து தாசில்தாரா ஆக போகிறான்? என்று கேட்டார். உடனே காமராஜர் ‘உன் பிள்ளையை படிக்க வை. நான் தாசில்தார் ஆக்குகிறேன்’ என்றார்.

கல்வி புரட்சி செய்த காமராஜர் :

பிரிட்டிஷ் ஆட்சியின் போது கல்வி கற்றோர் சதவீதம் 7-ஆக மட்டுமே இருந்தது. காமராஜர்  ஆட்சியில்  37 சதவீீீதமாக உயர்ந்தது. பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை 180லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. பல்வேறு திறன்களுக்கு வாய்ப்பளிக்குமாறு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. ஊர்கள் தோறும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களின் வயிற்று பசி மட்டுமல்ல, அறிவு பசியையும் போக்கி இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளமிட்டவர் நம்முடைய கல்விக்கண் திறந்த காமராஜர் என்று சொல்வதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது என்பதே உண்மை.

click me!