தில்லிக்குப் போட்டியாக... சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கடும் பனிமூட்டம்... திணறிய ஜிஎஸ்டி சாலை

First Published Dec 12, 2017, 10:24 AM IST
Highlights
fog in chennai and sub urban areas slow down road traffic


தில்லியில் இருந்ததைப் போல் காலையில் சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் இன்று காலை கடும் பனி மூட்டம் தென்பட்டது. இதனால் நெடுஞ்சாலையில் பெரும்பாலான வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னை வரும் 12 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 

கார்த்திகைக்குப் பின் மழை இல்லை, கர்ணனுக்குப் பின் கொடை இல்லை என்று ஒரு சொலவடை தமிழில் உண்டு. தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதியில் துவங்கிய வடகிழக்குப் பருவ மழை நவம்பர் மாதத்தில் நன்றாகப் பெய்தது. ஆனாலும் இன்னமும் போதிய மழை இல்லாமல், பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமல் உள்ளன. மழைக்கான வாய்ப்பு இப்போது இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மழை இல்லாத நிலையில், கார்த்திகை மாத கடைசி என்பதாலும், பனி மாதமான மார்கழி துவங்க இருப்பதாலும், இன்றே மூடுபனி அதிகம் தென்படத் துவங்கி விட்டது. இன்று காலை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல இடங்களில் மூடுபனி அதிகம் காணப்பட்டது. 

கடும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை நேரத்தில் குளிர் சூழல் நிலவியது. சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் பெரும் பனி மூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் இருந்து சென்னையை இணைக்கும் ஜி.எஸ்.டி. சாலை, தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு துவங்கி மறைமலை நகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், நெடுஞ்சாலையில் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதாமல் இருக்க மெதுவாகவே சென்றன. முகப்பு விளக்கு எரிந்தும், புகை மூட்டத்தில் வாகனங்கள் எதுவும் தெரியாததால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெரிதும் சிரமப்பட்டனர். 

இதனிடையே, சென்னை விமான நிலையப் பகுதியிலும் கடும் பனி மூட்டம் நிலவியது. சிக்னல் விளக்குகள் சரியாகத் தெரியாததால், விமானங்கள் தரை இறங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.  சில விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.  லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து செல்லும் 12 விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது. காலை 9 மணி கடந்தும் பனிமூட்டம் நீடித்தது.

click me!