
கொரோனா தொற்றை உறுதி செய்யும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மிக முக்கிய சோதனை முறைகளில் ஒன்றாகக் உலக அளவில் கருதப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா விதிமுறைகளுக்கு மத்தியில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்பவர்கள் உட்பட பல விஷயங்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கேட்கப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போதும் வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்டுகள் ஆர்.டி.பி.சி.ஆர் அல்லது ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.
பொதுவாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளுக்கான முடிவு, சுமார் 3 நாட்களுக்குப் பிறகு தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கிறது. பெரு நகரங்களில் இது சில நாட்கள் வரை ஆகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் மக்கள் நலவாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தொற்றை உறுதிபடுத்தும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணம் ஜனவரி மாதம் 400 ரூபாயாக குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணம் 400 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, குழு மாதிரிகளுக்கான கட்டணம் 150 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் அல்லாதவர்கள் தனியார் ஆய்வுக் கூடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 700 ரூபாய் ஆக இருந்த நிலையில் 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.