
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து வரும் பிப்ரவரி 1, 2, 5 ஆகியதேதி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரிலும், 2ம் தேதி பாலமேடு, 5ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இருக்கிறது.
இந்நிலையில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணிகளை காளை வளர்ப்போர் தீவிரமாக தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள் பார்ப்பவர்கள் கண்களுக்கு மாடுகளாக தெரிகிறது. ஆனால், காளைகளை எங்கள் வீட்டு குழந்தைகளாகவே நாங்கள் நினைத்து பாசத்துடன் வளர்க்கிறோம்.
காளைகளுக்கு பருத்தி விதை, தவிடு தவிர்த்து வாழைப்பழம், தேங்காய் புண்ணாக்கு உள்பட சத்தான உணவுகளை கொடுக்கிறோம். தற்போது, ஜல்லிக்கட்டு விழாவுக்காக காளைகளுக்கு நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறோம்.
மாடுகளின் கொம்புகளை சீவுவதில்லை. மரப்பட்டைகள் போல மாடுகளின் கொம்புகளைச் சுற்றி வளருவதை, பாலிஷ் செய்து சரிசெய்வதை பலர் தவறாக கூறுகின்றனர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்காக, போராட்டம் நடத்தி, பல்வேறு சிரமங்களை அனுபவித்த கல்லூரி மாணவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.